×

மாற்கு : 1

  • 1 : தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
  • 2 : இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
  • 3 : கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
  • 4 : யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
  • 5 : அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
  • 6 : யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
  • 7 : அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
  • 8 : நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
  • 9 : அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
  • 10 : அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம்திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
  • 11 : அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
  • 12 : உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
  • 13 : அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
  • 14 : யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
  • 15 : காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
  • 16 : அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
  • 17 : இயேசு அவர்களை நோக்கி: என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
  • 18 : உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
  • 19 : அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,
  • 20 : உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
  • 21 : பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
  • 22 : அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
  • 23 : அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
  • 24 : அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
  • 25 : அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
  • 26 : உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது.
  • 27 : எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
  • 28 : அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
  • 29 : உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
  • 30 : அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவனளக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
  • 31 : அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
  • 32 : சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
  • 33 : பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
  • 34 : பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
  • 35 : அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
  • 36 : சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
  • 37 : அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
  • 38 : அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
  • 39 : கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர்பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
  • 40 : அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
  • 41 : இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
  • 42 : இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
  • 43 : அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
  • 44 : ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
  • 45 : அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.