1 நாளாகமம் : 18

  • 1 : இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத்பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.
  • 2 : அவன் மோவாபியரையும் முறிய அடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
  • 3 : சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.
  • 4 : அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
  • 5 : சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்யத் தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
  • 6 : தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
  • 7 : ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
  • 8 : ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.
  • 9 : தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
  • 10 : அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.
  • 11 : அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும் கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
  • 12 : செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.
  • 13 : ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
  • 14 : தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
  • 15 : செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
  • 16 : அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
  • 17 : யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.
மேல்