2 நாளாகமம் : 23

  • 1 : ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
  • 2 : அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
  • 3 : அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக்குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.
  • 4 : நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,
  • 5 : மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.
  • 6 : ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.
  • 7 : லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்க வேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
  • 8 : ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவு கொடுக்கவில்லை.
  • 9 : தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
  • 10 : அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.
  • 11 : பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.
  • 12 : ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,
  • 13 : இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீத வாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத் தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
  • 14 : ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
  • 15 : அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
  • 16 : அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.
  • 17 : அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.
  • 18 : தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,
  • 19 : யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
  • 20 : நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்துச் சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காதனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.
  • 21 : தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.
மேல்