2 நாளாகமம் : 36

  • 1 : அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
  • 2 : யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.
  • 3 : அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,
  • 4 : அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
  • 5 : யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
  • 6 : அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
  • 7 : கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளைப் பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
  • 8 : யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
  • 9 : யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
  • 10 : மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்குக் கொண்டுவரப்பண்ணி, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின் மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
  • 11 : சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு,
  • 12 : தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்குமுன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.
  • 13 : தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
  • 14 : ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
  • 15 : அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார்.
  • 16 : ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.
  • 17 : ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
  • 18 : அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
  • 19 : அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.
  • 20 : பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.
  • 21 : கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
  • 22 : எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
  • 23 : அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.
மேல்