2 இராஜாக்கள் : 14

  • 1 : இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான்.
  • 2 : அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் யொவதானாள்.
  • 3 : அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.
  • 4 : மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
  • 5 : ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
  • 6 : ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலை செய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.
  • 7 : அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான்.
  • 8 : அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.
  • 9 : அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
  • 10 : நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமைபாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
  • 11 : ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,
  • 12 : யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
  • 13 : அகசியாவின் குமாரனாகிய யோவாசின் குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,
  • 14 : கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
  • 15 : யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 16 : யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 17 : இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.
  • 18 : அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 19 : எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
  • 20 : குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
  • 21 : யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
  • 22 : ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
  • 23 : யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,
  • 24 : கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.
  • 25 : காதேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
  • 26 : இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.
  • 27 : இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.
  • 28 : யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 29 : யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
மேல்