×

பிரசங்கி : 10

  • 1 : செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
  • 2 : ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.
  • 3 : மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
  • 4 : அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
  • 5 : நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.
  • 6 : மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
  • 7 : வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
  • 8 : படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
  • 9 : கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.
  • 10 : இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டமாற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.
  • 11 : தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.
  • 12 : ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
  • 13 : அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.
  • 14 : மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
  • 15 : ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
  • 16 : ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
  • 17 : ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.
  • 18 : மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப்பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.
  • 19 : விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
  • 20 : ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.