யாத்திராகமம் : 36

  • 1 : அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.
  • 2 : பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.
  • 3 : அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
  • 4 : அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
  • 5 : மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
  • 6 : அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
  • 7 : செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
  • 8 : வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லி பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
  • 9 : ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
  • 10 : ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
  • 11 : இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
  • 12 : காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
  • 13 : ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
  • 14 : வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
  • 15 : ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழு நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
  • 16 : ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
  • 17 : இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்றமூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
  • 18 : கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
  • 19 : சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
  • 20 : வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
  • 21 : ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.
  • 22 : ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
  • 23 : வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
  • 24 : அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
  • 25 : வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
  • 26 : ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
  • 27 : வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
  • 28 : வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
  • 29 : அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.
  • 30 : அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
  • 31 : சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
  • 32 : வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின் பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.
  • 33 : நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.
  • 34 : பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
  • 35 : இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,
  • 36 : அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
  • 37 : கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லி பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,
  • 38 : அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.
மேல்