யாத்திராகமம் : 8

  • 1 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
  • 2 : நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.
  • 3 : நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
  • 4 : அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • 5 : மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
  • 6 : அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
  • 7 : மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
  • 8 : பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
  • 9 : அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
  • 10 : அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
  • 11 : தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான்.
  • 12 : மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள்நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
  • 13 : கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
  • 14 : அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
  • 15 : இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.
  • 16 : அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் எனறார்.
  • 17 : அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்துதேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
  • 18 : மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.
  • 19 : அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
  • 20 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
  • 21 : என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும் உன் ஊழியக்காரர்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
  • 22 : பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,
  • 23 : என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • 24 : அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
  • 25 : அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.
  • 26 : அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் பலியிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
  • 27 : நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.
  • 28 : அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.
  • 29 : அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.
  • 30 : மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
  • 31 : அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.
  • 32 : பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.
மேல்