×

எசேக்கியேல் : 30

  • 1 : கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  • 2 : மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம்சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
  • 3 : நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.
  • 4 : பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.
  • 5 : எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
  • 6 : எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 7 : பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
  • 8 : நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
  • 9 : நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
  • 10 : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.
  • 11 : இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
  • 12 : அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
  • 13 : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின்சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
  • 14 : பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
  • 15 : எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
  • 16 : எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
  • 17 : ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
  • 18 : எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.
  • 19 : இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
  • 20 : பதினோராம் வருஷம் முதலாம் மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  • 21 : மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாகத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.
  • 22 : ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,
  • 23 : எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
  • 24 : பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
  • 25 : பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என்பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
  • 26 : நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.