×

ஏசாயா : 10

  • 1 : ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
  • 2 : அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
  • 3 : விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?
  • 4 : கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
  • 5 : என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
  • 6 : அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
  • 7 : அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
  • 8 : அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
  • 9 : கல்னோபட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
  • 10 : எருசலேமையும் சமாரியாவையும்பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
  • 11 : நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.
  • 12 : ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
  • 13 : அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.
  • 14 : ஒரு குருவிக்கூட்டைக் கண்டு பிடிக்கிறதுபோல் என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.
  • 15 : கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
  • 16 : ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
  • 17 : இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
  • 18 : அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
  • 19 : காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
  • 20 : அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
  • 21 : மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
  • 22 : இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோட புரண்டுவரும்.
  • 23 : சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
  • 24 : ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
  • 25 : ஆனாலும் இன்னும் கொஞ்சக் காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 26 : ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
  • 27 : அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
  • 28 : அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
  • 29 : கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
  • 30 : காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு.
  • 31 : மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங் கூடுகிறார்கள்.
  • 32 : இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கை நீட்டி மிரட்டுவான்.
  • 33 : இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
  • 34 : அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.