×

யோபு : 5

  • 1 : இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
  • 2 : கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும்.
  • 3 : நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
  • 4 : அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
  • 5 : பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத் தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
  • 6 : தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
  • 7 : அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
  • 8 : ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்னே.
  • 9 : ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
  • 10 : தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
  • 11 : அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின் மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
  • 12 : தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
  • 13 : அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
  • 14 : அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத் தடவித் திரிகிறார்கள்.
  • 15 : ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
  • 16 : அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
  • 17 : இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
  • 18 : அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
  • 19 : ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
  • 20 : பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
  • 21 : நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
  • 22 : பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
  • 23 : வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.
  • 24 : உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
  • 25 : உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
  • 26 : தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
  • 27 : இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.