புலம்பல் : 5

  • 1 : கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.
  • 2 : எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப்போயின.
  • 3 : திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
  • 4 : எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.
  • 5 : பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.
  • 6 : அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.
  • 7 : எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
  • 8 : அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.
  • 9 : வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.
  • 10 : பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.
  • 11 : சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
  • 12 : பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
  • 13 : வாலிபரை ஏந்திரம் அரைக்கக்கொண்டுபோகிறார்கள்; இளைஞர் விறகுசுமந்து இடறிவிழுகிறார்கள்.
  • 14 : முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
  • 15 : எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
  • 16 : எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
  • 17 : அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
  • 18 : பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
  • 19 : கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
  • 20 : தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?
  • 21 : கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
  • 22 : எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!
மேல்