நெகேமியா : 8

  • 1 : ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
  • 2 : அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
  • 3 : தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
  • 4 : வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
  • 5 : எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
  • 6 : அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்.
  • 7 : யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா, என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
  • 8 : அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
  • 9 : ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
  • 10 : பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
  • 11 : லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
  • 12 : அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
  • 13 : மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
  • 14 : அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியருக்கிறதைக் கண்டார்கள்.
  • 15 : ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரிச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.
  • 16 : அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிரகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
  • 17 : இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
  • 18 : முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
மேல்