எண்ணாகமம் : 25

  • 1 : இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
  • 2 : அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.
  • 3 : இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
  • 4 : கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலைவிட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.
  • 5 : அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.
  • 6 : அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக்கொண்டு வந்தான்.
  • 7 : அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,
  • 8 : இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.
  • 9 : அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.
  • 10 : கர்த்தர் மோசேயை நோக்கி:
  • 11 : நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.
  • 12 : ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.
  • 13 : அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
  • 14 : மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.
  • 15 : குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.
  • 16 : கர்த்தர் மோசேயை நோக்கி:
  • 17 : மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
  • 18 : பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.
மேல்