நீதிமொழிகள் : 30

  • 1 : யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன:
  • 2 : மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
  • 3 : நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை; பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
  • 4 : வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
  • 5 : தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
  • 6 : அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்ளுவார், நீ பொய்யனாவாய்.
  • 7 : இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
  • 8 : மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
  • 9 : நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
  • 10 : எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
  • 11 : தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.
  • 12 : தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.
  • 13 : வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.
  • 14 : தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு.
  • 15 : தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
  • 16 : அவையாவன: பாதாளமும, மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
  • 17 : தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
  • 18 : எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.
  • 19 : அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
  • 20 : அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
  • 21 : மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.
  • 22 : அரசாளுகிற அடிமையினிநிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
  • 23 : பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
  • 24 : பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
  • 25 : அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
  • 26 : சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,
  • 27 : ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
  • 28 : தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
  • 29 : விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
  • 30 : அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
  • 31 : போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே.
  • 32 : நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
  • 33 : பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
மேல்