×

நீதிமொழிகள் : 6

  • 1 : என் மகனே, நீ உன் சினேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
  • 2 : நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
  • 3 : இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய்.
  • 4 : உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
  • 5 : வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
  • 6 : சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
  • 7 : அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
  • 8 : கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
  • 9 : சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
  • 10 : இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
  • 11 : உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்.
  • 12 : பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
  • 13 : அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
  • 14 : அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
  • 15 : ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
  • 16 : ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
  • 17 : அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
  • 18 : துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
  • 19 : அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
  • 20 : என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
  • 21 : அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
  • 22 : நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
  • 23 : கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
  • 24 : அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திர்க்கும் விலக்கிக் காக்கும்.
  • 25 : உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
  • 26 : வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
  • 27 : தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
  • 28 : தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
  • 29 : பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
  • 30 : திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
  • 31 : அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
  • 32 : ஸ்திர்யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்.
  • 33 : வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது
  • 34 : ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
  • 35 : அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.