சங்கீதம் : 40

  • 1 : கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
  • 2 : பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
  • 3 : நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
  • 4 : அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
  • 5 : என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
  • 6 : பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
  • 7 : அப்பொழுது நான். இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;
  • 8 : என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
  • 9 : மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
  • 10 : உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
  • 11 : கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
  • 12 : எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
  • 13 : கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரியும்.
  • 14 : என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.
  • 15 : என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
  • 16 : உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
  • 17 : நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
மேல்