×

சங்கீதம் : 51

  • 1 : தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
  • 2 : என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
  • 3 : என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
  • 4 : தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
  • 5 : இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
  • 6 : இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
  • 7 : நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
  • 8 : நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
  • 9 : என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
  • 10 : தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
  • 11 : உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
  • 12 : உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
  • 13 : அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
  • 14 : தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும்.
  • 15 : ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
  • 16 : பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
  • 17 : தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
  • 18 : சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
  • 19 : அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.