×

சங்கீதம் : 6

  • 1 : கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
  • 2 : என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
  • 3 : என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
  • 4 : திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
  • 5 : மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
  • 6 : என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
  • 7 : துயரத்தினால் என் கண்கள் குழி விழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
  • 8 : அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
  • 9 : கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
  • 10 : என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.