சங்கீதம் : 9

  • 1 : கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
  • 2 : உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  • 3 : என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
  • 4 : நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
  • 5 : ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்.
  • 6 : சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று.
  • 7 : கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்.
  • 8 : அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.
  • 9 : சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர்.
  • 10 : கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
  • 11 : சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.
  • 12 : இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
  • 13 : மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,
  • 14 : தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
  • 15 : ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக் கொண்டது.
  • 16 : கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக் கொண்டான். (இகாயோன், சேலா.)
  • 17 : துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
  • 18 : எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.
  • 19 : எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
  • 20 : ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)
மேல்